வியாழன், 24 நவம்பர், 2016

ரூ.500, ரூ.1000 தடை: பதட்டத்தில் நீங்கள் செய்யவுள்ள தவறுகளை தவிர்ப்பது எப்படி.???



பிரதமர் நரேந்திர மோடி, ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை செல்லாமல் செய்த உத்தரவு எல்லாரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை விட, இது கறுப்புப்பணம், கள்ளநோட்டு மற்றும் தீவிரவாததுக்கு முதலீடு ஆகியவற்றின் மீதான நேரடி தாக்குதலாக பார்க்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு இந்திய மக்களை அச்சத்தில் தள்ளியுள்ளது. எல்லாரும் வங்கிகளுக்கும், ஏடிஎம் மையங்களுக்கும், தபால் நிலையங்களுக்கும் ஓடுவதை பார்க்கிறோம். ஆனால் இவ்வளவு பதட்டமும், பயமும் தேவை இல்லை. உங்களது பணம் பாதுகாப்பாக இருக்கும். டிசம்பர் 30 ஆம் தேதி வரை உங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.

நீங்கள் பதட்டத்தில் செய்யக்கூடிய 5 தவறுகளை எப்படி தவிர்க்கமுடியும்?

1. பண வரவு-செலவு குறிப்பேட்டில் உள்ளதைவிட வங்கியில் அதிகம் செலுத்துவது: சிறு வணிகம் புரிபவர்கள் பெரும்பாலும் சரியான கணக்கு வழக்குகளை வைத்திருப்பதில்லை. அவர்களின் பண வரவு குறிப்பேட்டில் உள்ளதை விட அதிக அளவில் கையில் பணம் வைத்திருப்பார்கள். இது இந்தியாவில் பொதுவான ஒரு விஷயம். அதனால் வங்கியில் பணத்தை செலுத்தும் முன் கணக்கு வழக்கை சரிப்பார்த்து செய்யவும்.

இந்த அறிவிப்பால் சிறு வணிகங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது உண்மை. ஆனால் நீங்கள் கணக்கில் காட்டியுள்ள வரவைவிட அதிக வருமானத்தை வங்கியில் மாற்றினால் அதற்கான வரியை கட்ட தயாராக இருங்கள்.

தீர்வு:
நீங்கள் எல்லாவற்றையும் சரியாக செய்வதாக நினைத்துக்கொண்டிருப்பீர்கள். ஆனால் உங்கள் வர்த்தகத்துக்கான கணக்கு குறிப்பேட்டில், காட்டாத வருமானத்தை முதலில் திருத்தி அமைத்து, கையில் உள்ள பணத்துக்கு கணக்கை காட்டிவிட்டு வங்கியில் செலுத்துங்கள். இதுவே தற்போது உங்களுக்கு இருக்கும் சிறந்த வழி.

2. மொத்தமாக பணத்தை செலுத்துவது: இது நீங்கள் செய்யவுள்ள மிகத் தவறான செயல் ஆகும். வீடுகளில் உள்ள பெண்கள் உட்பட பலர், பல ஆண்டுகளாக லட்சக்கணக்கில் பணத்தை சேமித்து வைத்திருப்பார்கள். சிறு வணிகர்கள், சிறு துறை வல்லுனர்கள், கடையோரக் கடைகள் வைத்திருப்போர் இதுபோன்று கையில் ரொக்கமாக வைத்திருப்பது இந்தியாவில் சகஜம். அவர்கள் வரி வரம்பின் கீழ் வருமானம் உள்ளவர்களாக இருப்பர். அதனால் சரியான கணக்கு வைக்காமலும் இருப்பர்.

தீர்வு: அவ்வாறு உள்ள பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக வங்கியில் செலுத்துங்கள். முடிந்த வரை அந்த வருமானத்துக்கான சான்றுகளை சேகரியுங்கள். ஒரு பில் என்றாலும் பரவாயில்லை அதை காட்டுங்கள். வருமான வரித்துறை அதிகாரிகள் உங்கள் வர்த்தகம் பற்றி புரிந்தவர்கள் அதனால் அவை உதவியாக இருக்கும். இனியும் இதுபோன்ற சிறு வர்த்தகத்துக்கான போதிய சான்றுகளை மறக்காமல் பெற்று கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். தேவை எனில் வல்லுனர்களை நாடுங்கள்.

முக்கிய தகவல்

”வங்கிகள் தங்களின் சேமிப்பு கணக்கு விபரத்தை ஐடி துறைக்கு வருடாந்திர ரிப்போர்டில் முழு விவரங்களுடன் அளிக்கவேண்டும். 10 லட்சத்துக்கும் அதிகமான பண முதலீடு உள்ள ஒவ்வொரு அக்கவுண்ட் பற்றிய ஆவணங்களையும் அவர்கள் சமர்ப்பித்தாக வேண்டும்.”
வருமான வரித்துறையும் 2 லட்சம் ரூபாய்க்கு அதிகமான முதலீடுகள் செய்யும் நபர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்க உள்ளனர்.

3. தங்கத்தில் முதலீடு: மக்கள் செய்யும் அடுத்த மிகப்பெரிய தவறு. இவ்வாறு பணத்தை தங்கம் வாங்கி கழித்துவிடலாம் என்று எண்ணினால் அது உங்களுக்கு முற்றிலும் எதிராக மாற வாய்ப்புள்ளது. ஏன் என்று தெரிந்து கொள்ளுங்கள்:

நகை வியாபாரிகள் தற்போது கலால் வரி சட்டத்தின் கீழ் வந்துள்ளனர். அதனால் சரியான வரவு மற்றும் செலவு கணக்குகளை வைத்திருப்பது அவசியமாகி உள்ளது.

எல்லாரும் நகைக்கடைகளை தேடி ஓடி தங்களிடம் உள்ள பணத்தை தங்கம் வாங்கி செலவழிக்கின்றனர். இதனால் தங்கத்தின் விலை அதிகரிக்கும். இது ஒரு தற்காலிகமான உயர்வு ஆனால் விரைவில் விலை குறைந்திடும். தங்கத்தின் மதிப்பு குறைய வாய்ப்புள்ளது.

புதிய விதிகளின் படி, ஒருவர் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் வாங்கும்போதே வரி விதிப்பு செய்யபட்டுவிடும். அது உடனடியாக கணக்கில் வந்து அந்த வரிப்பணம் அரசுக்கு சென்று விடும். இதன் மூலம் நீங்கள் செய்யும் பரிவர்த்தனை அரசுக்கு தெரிய வந்துவிடும்.

முக்கிய தகவல்:

”எந்த ஒரு நபர் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்/சேவை விற்பனை செய்து அதற்கான பணத்தை பெற்றால், அந்த விற்பனையாளர் (Section 44AB வரி தணிக்கை கீழ்) அந்த பரிவர்த்தனை விவரங்களை தங்களது ஆண்டு தகவல் ரிப்போர்டில் வருமான வரித்துறைக்கு தெரிவித்திடவேண்டும்.”

4. உங்களின் தனிப்பட்ட தகவல்களை வெளியிடாதீர்கள்: பதட்டத்தில் பலரும் தங்களின் வருமானம் பற்றிய தனிப்பட்ட விஷயங்களை, அந்தரங்களை யோசிக்காமல் வெளியில் பகிர்ந்து ஆலோசனை கேட்கத்தொடங்கியுள்ளனர். இது உங்களை மேலும் பிரச்சனையில் கொண்டு விடும். தகுந்த வல்லுனர்களை கண்டுபிடித்து அவர்களிடம் தெளிவாக விளக்கி வழியை பெறுங்கள்.

5. வரிக்கு பயந்து வருமானத்தை மறைத்தல்: இன்னமும் பலர் தங்களின் கறுப்புப்பணத்தை மறைக்க வழிகளை தேடுகின்றனர். மேலும் பல தவறான முறைகளை தேடி வருகின்றனர். இது உங்களை இன்னமும் இக்கட்டத்தில் தான் கொண்டு செல்லும். அதைவிட வருமானத்தை வெளிப்படுத்தி வரியை கட்டுங்கள். அரசின் அடுத்தடுத்து வரும் முடிவுகள் உங்களை எப்படியும் மாட்டிவிடும் வாய்ப்புள்ளது. இன்றோ, நாளையோ உங்களிடம் உள்ள கணக்கு காட்டாத வருமானம் அரசுக்கு தெரிந்து, கடும் தண்டனையில் கொண்டு சென்றுவிடும்.

சில மாதங்களுக்கு முன்பே அரசு, வரி செலுத்தாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பை அளித்தது. அப்போது அதை ஏற்காதோர் தற்போது நெறுக்கநிலையை சந்திக்கின்றனர். அதேபோல் இப்போது இதை செய்யாவிடில் வருங்காலத்தில் இன்னும் என்னவெல்லாம் வரும் என்று எண்ணிப் பாருங்கள். வரியை கட்டிவிட்டு நிம்மதியாக வாழ்வை கழியுங்கள்.

#தேர்போகி விஜய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக