வெள்ளி, 25 நவம்பர், 2016

நெற்பயிரை புகையான் பூச்சித் தாக்குதலில் இருந்து காப்பாற்ற.!!

திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போதையப் பருவத்தில் புகையான் பூச்சி தாக்குதல் அதிகரித்து வருவதால், அதிலிருந்து நெற்பயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள கீழ்கண்ட வழிமுறைகளை விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டும்.

#திருவள்ளூர் மாவட்டத்தில், பாண்டேஸ்வரம், ஆலத்தூர், கீழ்கொண்டையார் மற்றும் அருக்கம்பாக்கம் ஆகிய கிராமங்களில் நெற்பயிரை புகையான் பூச்சி தாக்கி அதிக சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

சேத அறிகுறி:
பூச்சிகள் தூர்களின் அடிப்பாகத்தில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதால் பயிர் மஞ்சள் நிறமாக மாறும். பின்னர் பழுப்பு நிறமாக மாறும். இது தத்துப்பூச்சி எரிப்பு எனப்படும். பாதிக்கப்பட்ட வயல் ஆங்காங்கே வட்ட வட்டமாகப் புகைந்தது போலக் காணப்படும்.

பொருளாதார சேத நிலை: தூருக்கு ஒரு பூச்சி, தூரில் சிலந்தி காணப்பட்டால் தூருக்கு 2 பூச்சிகள் என பொருளாதார சேதம் ஏற்படும்.

மேலாண்மை முறைகள்: நடவு வயலில் 8 அடிக்கு ஒரு அடி இடைவெளி விட்டு பத்தி நடவு செய்தல். மண் பரிசோதனை பரிந்துரைப்படி தழைச்சத்து இடும்பொழுது 3-4 முறையாகப் பிரித்து இடவேண்டும். களைச் செடிகளை அகற்றி விட வேண்டும்.
புகையான் பூச்சி தாக்குதலுக்கு எதிர்ப்புத் திறன், தாங்கும் திறன் கொண்ட ரகங்களான ஏடிடீ 36, ஏடிடீ 37, கோ42, பிஒய் 3 ஆகிய ரகங்களைப் பயிரிடலாம்.

 விளக்குப் பொறி அமைத்து தாய்ப்பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து அழிக்கலாம்.
மஞ்சள் நிற ஒட்டுப் பொறிகளை ஹெக்டேருக்கு 12 என்ற அளவில் அமைக்கலாம்.

வயலில் புகையானின் இயற்கை விரோதிகளான சிலந்தி, பச்சை மிரிட் நாவாய்ப்பூச்சி, புள்ளி வண்டு, தட்டான், ஊசித் தட்டான் போன்ற இரை விழுங்கிகளும், அனேக்ரஸ், ஒலிகோசிட்டா போன்ற முட்டை ஒட்டுண்ணிகளும் இப்பூச்சியைப் பெரும் அளவில் கட்டுப்படுத்துகின்றன.

 பொருளாதார சேத நிலையை எட்டியவுடன் கீழ்க்கண்ட பூச்சிக் கொல்லிகளுள் ஏதேனும் ஒன்றை ஒரு ஹெக்டேருக்கு தெளிக்க வேண்டும்.

 குளோரன்டிரினிலிப்ரோல் 18.5 எஸ்சி-150 மிலி. இமிடாகுளோபிரிட் 17.8 எஸ் எல் - 100 மிலி, பயூப்ரோபெசின் 25 எஸ்.சி -800 மிலிடைகுளோர்வாஸ் 76 எஸ்.சி 625 மிலி அசிப்பேட் 76 எஸ்.பி. -625 கிடிரைஅசோபாஸ் -40 இசி- 625 மிலி இட வேண்டும்.

புகையானின் மறு உற்பத்தியைப் பெருக்கும் மிதைல் பாரத்தியான் மற்றும் செயற்கை பைரித்ராய்டு மருந்துகளைத் தெளிக்கக் கூடாது.

மேலும், நெல் வயலில் #பாசியைக் கட்டுப்படுத்த காப்பர் சல்பேட் ஒரு கிலோ வீதம் ஒரு ஏக்கருக்கு இடவேண்டும்.

#தேர்போகி விஜய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக