சிறிலங்காவில் அரசபடையினராலும், பொலிசாரினாலும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் ஆட்கடத்தல் மற்றும் தடுப்புக்காவலின்போது மேற்கொள்ளப்படும் சித்திரவதை, பாலியல் வன்முறைகள் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஜெனிவாவில் ஐ.நா வினால் தொடுக்கப்பட்ட கேள்விகளினால் திணறிய சிறிலங்கா, அவற்றிற்குப் பதிலளிக்காமலேயே திரும்பியிருக்கிறது.
இதனை ஐ.நா அதிகாரிகள் மட்டுமல்ல, சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும், ஆர்வலர்களும் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
நேற்றும், நேற்றுமுந்தினமும் சித்திரவதைக்கு எதிரான ஐ.நா குழுவின் 59 வது கூட்டத்தொடரில் சிறிலங்காவில் இடம்பெற்றுவரும் சித்திரவதை, ஆட்கடத்தல், பாலியன் வன்முறைகள் குறித்த மீளாய்வு ஜெனீவாவில் இடம்பெற்றது. இறுதியாக 2011 ஆம் ஆண்டே சிறிலங்கா மீதான இந்த மீளாய்வு மேற்கொள்ளப்பட்டது.
சிறிலங்காவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதன் பின்னர் அங்கு காணப்படும் நிலைமைகளில் பாரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவற்றினைத் தடுக்கும் சட்டத்தீர்திருத்தங்களில் புதிய அரசு மேற்கொண்டிருப்பதனையும் இதில் கலந்துகொண்டிருந்த சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய தலையிலான அணி விலாவாரியாக எடுத்துக் கூறியது. அத்துடன் இதுவிடயத்தில் ஐ.நாவுடனும், அதன் இதர அமைப்புக்களுடனும் இணைந்து செயற்படத் தொடர்ந்தும் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஆனாலும் சிறிலங்காவில் இடம்பெற்றுவரும் சித்திரவதைகளுக்குப் பொலிசாரின் குற்றப்புலனாய்வு, மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான பிரிவினரே பெரும்பாலும் பொறுப்பு என்றும் குற்றஞ்சாட்டப்பட்டு, சிறிலங்காவின் தூதுக்குழுவில் இடம்பெற்றிருந்த சிறிலங்காவின் தேசிய புலனாய்வு தலைமையதிகாரி, இளைப்பாறிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிசிர மெண்டிஸ் இதற்குப் பதிலளிக்க வேண்டும் என்றும் ஐ.நா அதிகாரிகள் விடாப்பிடியாகக் கேட்டனர்.
இரண்டாவது நாள் கலந்துரையாடல் ஆரம்பித்த போது, நேற்று முன்தினம் ஐ.நா அதிகாரிகளினால் சிறிலங்காவில் இடம்பெற்ற, இடம்பெற்றுவரும் சித்திரவதைகள் குறித்த குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிக்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.
குறிப்பாக ஐக்கிய நாடுகளின் சித்திரவதைகளுக்கு எதிரான குழுவின் உதவித் தலைவர் தலைவர் பெலிஸ் கெயார் சீ.ஐ.டி. மற்றும் ரீ.ஐ.டி போன்ற அமைப்புக்களுக்கு முன்னர் பொறுப்பாகவிருந்த சிசிர மெண்டிசிடம் மனிக் முகாம் பிரதேசத்தில் அமைந்திருந்த சித்திரவதை முகாம், ஆட்கடத்தல், பாலியல் துஷ்பிரயோகங்கள் போன்ற விடயங்கள் குறித்தும், அதில் அவருக்குண்டான நேரடி, மறைமுகத் தொடர்புகள் குறித்தும் பதிலளிக்கும்படி கேட்டார்.
நேற்று முன்தினம் தான் கேட்ட முக்கியமான கேள்விகளுக்குப் பதிலளிக்காது வேறு கேள்விகளுக்கும், சட்டத்திருத்தங்கள் மற்றும் அதன் தொழினுட்ப ஏற்பாடுகள் குறித்துமே சிறிலங்கா தூதுக்குழு பதிலளித்திருப்பதாகச் சுட்டிக்காட்டிய பெலிஸ் கெயார் அம்மையார், சிசிர மெண்டிஸ் அங்கு இரண்டு நாட்களும் அங்கு பிரசன்னமாகியிருக்கின்ற போதிலும் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்காது இருந்தமை குறித்து விசனம் வெளியிட்டார்.
சித்திரவதை இடம்பெறும்வேளைகளில், இராணுவத்தினருடன், சி.ஐ.டி, ரீ.ஐ.டி உறுப்பினர்களுடன் நீங்களும் பிரசன்னமாகி இருந்தீர்களா? இது குறித்து விளக்கமளிக்கமுடியுமா? மனிக் முகாம் பகுதியிலும், பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாம் பகுதியிலும், வவுனியா வைத்தியசாலைப் பகுதிகளியிலும் வகைதொகையின்றி நபர்கள் கடத்தப்பட்டிருக்கிறார்கள், சித்திரவதைக்கும், பாலியல் துஷ்பிரயோகங்களுக்கும் உள்ளாக்கப்பட்டிருக்கிறாகள். இதுபற்றி உங்களுக்கு என்ன தெரியும்? இவை குறித்த பதிவேடுகள், தரவுகள் உங்களிடம் இருக்கிறதா? என்பது போன்ற கேள்விகள் சிசிர மெண்டிஸிடம் அவர் தொடர்ச்சியாகக் கேட்டார்.
குறிப்பாக 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2009 ஆம் ஆண்டு யூன் மாதம் வரையிலான காலப்பகுதியில் பொலிஸ் குற்றத்தடுப்புப் புலனாய்வு பிரிவான சீ.ஐ.டி மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவான ரீ.ஐ.டி ஆகியவதற்றிக்கு பிரதி பொலிஸ் மா அதிபர் சிசிர மெண்டிஸ் சித்திரவதைகள், கடத்தல்கள், தடுப்புக்காவலின்போது பாலியல் துஷ்பிரயோகங்கள் குறித்த கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக்கேட்டுக்கொண்டார்.
ஆனாலும், இலங்கை சட்ட மா அதிபரும், ஏனைய அதிகாரிகளும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட நேரத்தில் ஏனைய விடயங்கள் குறித்துப் பதிலளிப்பதில் காலத்தை விரயம் செய்து, சிசிர மெண்டிஸை பதிலளிக்காத வண்ணம் பாதுகாத்தனர்.
ஆனாலும் சிசிர மெண்டிஸ் பதிலளிப்பதற்கு வசதியாக ஐந்து நிமிடங்கள் இடைவேளே வழங்கப்பட்டது. ஆனாலும் மீண்டும் தொடர் ஆரம்பமானபோது, ஏனைய அதிகாரிகளே வேறுவிடயங்கள் குறித்தும் சட்டவாக்கங்கள் குறித்தும் பதிலளித்தனரே தவிர, சிசிர மெண்டிஸ் கடைசி வரை பதிலளிக்காது அவரைப் பாதுகாத்தனர்.
இறுதிவரை சிசிர மெண்டிஸ் அந்தக் கேள்விக்களுக்குப் பதிலளிக்கவில்லை. அதுமட்டுமன்றி சிறிலங்காவின் சட்ட மா அதிபரும், ஏனைய அதிகாரிகளும் அவர் பதிலளிக்காதவகையில் செயற்பட்டனர்,
இறுதிவரை சிசிர மெண்டிஸ் பதிலளிக்காதமை குறித்து நிகழ்விற்குத் தலைமை தாங்கிய ஐ.நா அதிகாரிகள் சுட்டிக்காட்டியதோடு அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு சிறிலங்காவினால் எழுத்துமூலம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படும் அறிக்கையில், இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பினையும் வெளியிட்டார். இந்தச் செயற்பாட்டினை சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும், ஆர்வலர்களும் வன்மையாகக் கண்டித்திருக்கிறார்கள்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக