பிளாட்பாரத்தில் பேப்பர் விற்ற சிவாங்கி ஐ.ஐ.டி-ஐ எட்டிப்பிடித்த மெய் சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.
சிறந்த அறிவாற்றல் இருந்தும் பணம் என்ற ஒன்று தடையாக இருப்பதால், நினைத்த படிப்பை எட்டிப்பிடிக்க முடியாமல் போனவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். படிக்க முடியாமல் தவிக்கும் குழந்தைகளை படிக்க வைத்து உதவும் உன்னதமான உள்ளங்களும் உலகில் இருக்கின்றன.
ஆனால், இதன் எண்ணிக்கை தான் சம அளவில் இல்லை. உதவும் எண்ணம் இருக்கும் நபர்களிடம், உதவுவதற்கான பொருள் இருப்பதில்லை. பொருள் இருப்பவர்களிடம், உதவலாம் என்ற எண்ணம் இருப்பதில்லை. வெகு சிலரிடம் தான் இந்த இரண்டும் இருக்கிறது.
பீகார் மாநிலத்தை சேர்ந்த கணித ஆசிரியர் ஆனந்த் குமார் . இவர் சூப்பர் 30 என்ற மையம் மூலம் படிக்க இயலாத மாணவர்களுக்கு உதவி வருகிறார்.
இவர் மூலமாக தான் சிவாங்கி எனும் பேப்பர் போட்டுக் கொண்டிருந்த பெண் இன்று ஐ.ஐ.டி மாணவியாக ஜொலிக்கிறார்.
சிவாங்கி, பிளாட்பாரத்தில் தந்தையுடன் பேப்பர் விற்றுக் கொண்டிருந்த பெண். இன்று இவர் ஐ.ஐ.டி-யில் படித்து, வேலை வாங்கிய பெண்ணாக மாறியுள்ளார், என்றால் அதற்கு காரணம் நல்ல மனம் கொண்ட மனிதர்கள் தான்.
ஆனந்த் குமார் கடந்த 2002-ம் ஆண்டிலிருந்து சூப்பர் 30 என்ற மையம் நடத்தி வருகிறார். இது நல்ல அறிவாற்றல் கொண்ட மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கும் மையமாகும்.
முக்கியமாக பொருளாதார ரீதியில் பின்தங்கி இருக்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்து பயிற்சி வழங்கப்படுகிறது. ஆனந்த் குமாரிடம் ஆதரவு தேடி சென்ற மாணவர்களுள் சிவாங்கியும் ஒருவர். ஆனந்த் குமார் பற்றி நாளிதழ்களில் வெளிவந்த செய்தி அறிந்து தான் சிவாங்கி அவரை காண சென்றார்.
ஆனந்த் குமார் சிவாங்கி பற்றி கூறியது...
ஆனந்த் குமார் சிவாங்கி குறித்து தனது முகநூலில் பகிர்ந்திருந்தார். அதில் அவர் சிவாங்கி குறித்து கூறியிருந்தாவது... முதல் படத்தில் இருப்பது சிவாங்கி சூப்பர் 30-ல் சேர வந்திருந்த போது இருந்த சிவாங்கியின் படம். இரண்டாவது படம் ஐ.ஐ.டி மாணவி சிவாங்கியுடையது. இந்த இரண்டு படத்தை வைத்தே இவரது வெற்றியை நாம் அறிந்துவிட முடியும். பள்ளியில் படிக்கும் போதிருந்தே, தந்தைக்கு உதவியாக பேப்பர் விற்று கொண்டிருந்தவர் சிவாங்கி. தந்தைக்கு உடல்நலம் குறைபாடு ஏற்படும் போதெல்லாம் சிவாங்கி தான் பேப்பர் விற்கும் வேலையை முழுமையாக கையாண்டு வந்துள்ளார்.
சிவாங்கி படித்தது, உத்தரப்பிரதேசம், கான்பூர்-ல் உள்ள ஒரு அரசு மேல்நிலை பள்ளியில் தான். ஒருநாள் நாளிதழில் ஆனந்த் குமார் பற்றி படித்து செய்தி அறிந்து இவரிடம் உதவி நாடி வந்துள்ளார்.
சூப்பர் 30-ல் சேர்ந்த பிறகு, ஆனந்த் குமாரின் குடும்பத்தோடு மிக நெருக்கமானார் சிவாங்கி. ஆனந்த்-ன் அம்மாவை பாட்டி என ஆசையாக அழைக்கும் அளவிற்கு நெருக்கமாக, பாசமாக பழகி வந்துள்ளார் சிவாங்கி. இவருக்கு ஐ.ஐ.டி-யில் படிக்க சீட் கிடைத்து ஆனந்த் குமார் வீட்டில் இருந்து செல்லும், போது ஆனந்த் குமார் வீட்டு பெண்கள், தங்கள் மகள் தங்களை பிரிந்து எங்கோ செல்வது போன்ற உணர்வில் அழுதனர் என்றும் ஆனந்த் குமார் கூறியுள்ளார்.
சிவாங்கியின் தந்தை!
மக்கள் கனவு கண்டு அது நிஜமாக நடக்கும் போது ஒரு மகிழ்ச்சி பிறக்கும். ஆனால், நான் இந்தளவு பெரிய கனவு கூட கண்டதில்லை என்கிறார் சிவாங்கியின் தந்தை. சிவாங்கி இன்றும் தன் குடும்பத்துடன் நெருக்கமாக பேசி வருகிறார். அவருக்கு வேலை கிடைத்தது, எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது. சிவாங்கிக்கு வேலை கிடைத்து எண்ணி எனது தாயார் மிகுந்த மகிழ்ச்சியில் அழுக துவங்கிவிட்டார் என ஆனந்த் குமார் கூறியுள்ளார்.
#தேர்போகி விஜய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக